கரைகளை தீண்டா அலைகள்

ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து வாழும் வரையான காலத்தில் பலவித ஆசைகள் எதிர்பார்ப்புகளோடு வாழ்ந்து வருகின்றான். அவற்றையே தனது இலட்சியமாகவும் கொள்கின்றான். ஆசைகள் எதிர் பார்ப்புகள் இல்லை என்றால் வாழ்வில் ஒருவித பிடிப்புமே இல்லாமல் போய்விடுகின்றது. இருந்தும் அந்த ஆசைகள் எதிர் பார்ப்புக்கள் நிறை வேறாமல் போய்விடுகின்ற சந்தர்ப்பங்களிலும் கூட மன விரக்தியும் வாழ்க்கையை வெறுத்த நிலைக்கும் ஆளாகின்றான்.

வாழ்க்கைப் பெரும் கடலில் தோன்றுகின்ற இந்த அலையானது சில கரைகளை அடைவதில்லை. சில அலைகள் சுனாமியாக ரூபம் எடுத்து பேர் அழிவையும் கொண்டு வருகின்றது. அப்படியானால் இதமாக கரையை தீண்டி கால்களை நனைய வைக்கும் அலைகளை வாழ்க்கை கடலில் எப்படி உருவாக்குவது..?

"விரலுக்கேற்றமாதிரி வீக்கம் இருக்க வேண்டும்" என்பது முது மொழி. அதற்கமைய ஒருவரின் ஆசையும் தனது தகுதிக்கமைய வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.


ஒரு சாதாரண மனிதன் தனது பயணத்தினை இலகுவாக்க ஒரு செருப்பிற்கு ஆசைப் படலாம். ஆனால் அந்தச் செருப்பினையே வாங்குவதற்கு கஸ்ரப்படும் நிலை இருக்கும் போது காருக்கு ஆசைப் படுவதென்பது நிறைவேற்ற முடியாத ஒன்றாக போய்விடுகின்றது. அதனால் மனதில் சோர்வும் விரக்தியும்தான் எஞ்சுகின்றது. அந்த ஆசை அலையாக எழுந்து நிறை வேறாமல் கரையை தொடும் முன்னரே அப்படியே ஓய்ந்து போகின்றது.

முதலில் செருப்பினை வாங்குவதற்கு ஆசைப்பட வேண்டும். அதற்கான முயற்சியை கைவிடாது தொடர்ந்து அதற்காக உழைத்து செருப்பினை வாங்கி விட்டால் அடுத்த படியாக ஒரு சைக்கிள் (துவிச்சக்கர வண்டி)வாங்குவதற்கு ஆசைப் படலாம். பின்னர் அதற்காக பாடுபட்டு சைக்கிலும் வாங்கியாகி விட்டதா... இனி ஒரு மோட்டார் சைக்கிலை வாங்குவதற்கு ஆசைப் படலாம். அதனையும் பெற்ற பின்னர் இனி காருக்கு ஆசைப் படுவதில் முயற்சியை தொடரலாம்.

"முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"

வெற்றுக் கால்களுடன் இருந்து தனது பயணத்தினை இலகுவாக்குவதற்கு படிப்படியாக மோட்டார் சைக்கிலை வாங்கும் வரை எடுத்த முயற்சிகள் அதனால் அடைந்த அனுபவங்கள் பாடமாக இருந்து கார் வாங்குவதனை இலகுவாக அடைந்துவிட உறுதுணையாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. எதனையும் படிப் படியாக செய்வதனால் எடுத்த முயற்சி அல்லது கொண்ட இலட்சியத்தை இலகுவாக அடைந்து விடலாம்.

வெற்றுக் கால்களுடன் இருப்பவன் செருப்பு வாங்க வேண்டும் என்ற இலட்சியம் இல்லாமல் முடமானவனைப் பார்த்து தனக்கு கால்களாவது இருக்கின்றதே என்று ஆறுதலடைந்து கொண்டு வெறுமனே இருந்தால் அவனது வாழ்க்கைப் பெரும் கடலில் எந்த ஒரு அலையும் அடிக்காமலே போய்விடுகின்றது. அலை அடிக்காத கடல் கடலாக இருக்காது காலப் போக்கில் குட்டையாகி விடும்.

எப்போதும் எமக்கு முன்னுக்கு ஒரு இலட்சியத்தை வைத்து அதை நோக்கி நகரும் போது வாழ்க்கையும் அர்த்தம் பெற்று விடுகின்றது. அந்த இலட்சியத்தை அடையும் போது ஏற்படுகின்ற கஸ்ரங்கள் எமக்கு ஆசானாகின்றது. பல படிப்பினைகளை எமக்கு கற்றுத்தருகின்றது.

ஆதலால் தொடற்சியாக நியாயமான ஆசைகளை வளர்த்துக் கொள்வோம். படிப்படியான முயற்சிகளால் அவ்விலட்சியத்தை கரைகள் தீண்டச் செய்வோம். தொடற்சியாக அலைகள் தீண்டும் கரைகள் தனில் அலைகள் தரும் நுரை மிதித்து விளையாடுவோம்..!


(நுரை என்பது கொண்ட இலட்சியத்தின் வெற்றி)

No comments: