எப்போதும் நேரத்திற்கே எழும்பி விடுவேன் இன்று மட்டும் அதிகாலை எழும்புவதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது.
இந்த தாமதத்தினால்தான் இந்தப் பிரச்சனையே.....
இந்தப் பிரச்சனைக்கு நேற்றும் காரணமாக இருந்தது. அத்துடன் எனது மனைவியும் ஒரு காரணம் தான்..!
அப்போ என்னில் எந்தவித தவறும் இல்லையா...?
தனது தவறுகளை நியாயப் படுத்த மற்றையவர்கள் மீதோ அல்லது.. அதற்கான காரணிகள் மீதோ பழியைப் போடுவது தானே.. உலக இயல்பாகிப் போய் விட்டது...! நானும் அப்படியாக இருக்கலாம்....ஏன் நீங்கள் கூட அப்படி இல்லையா...?
சரி நேற்று நடந்தது என்ன...?
செய்ய வேண்டிய வேலையை விட்டு வேறு வேலை செய்து பின்ன..செய்யவேண்டிய வேலை எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்யும்போது. வீடு போகும் நேரத்தில் அரை மணி நேரத்தை அது விழுங்கிவிட்டது.
வீடு போக வெளியே வந்தால் சோவென்று மழை. காரை எடுத்துக் கொண்டு வீடு போகும்போதுதான் கவனித்தேன். வீட்டிற்கு போகுமட்டும் காரில் உள்ள பெற்றோல் காணாது என்பதனை. அதனால் அருகில் உள்ள பெற்றோல் நிரப்பும் நிலையம் சென்று பெற்றோலைப் போடும்போது அது இன்னும் இருபது நிமிடங்களை விழுங்கி விட்டது.
வழமையாக வீடு போகும் நேரத்தில் விட ஐம்பது நிமிடங்கள் இப்போது தாமத மாகப் போய்க் கொண்டிருக்கின்றேன்.... வேலை இடத்தில் இருந்து ஒரு மணி நேரத்தில் வீடு போய் சேரும் நான் மழை என்பதால் வாகன நெரிசல் அதிகமாக ஒண்டரை மணித்தியாலம் எடுத்தது. அதனால் இரவு பத்து மணிக்கு வீடு போய் சேரும் எனக்கு இன்று பதின் ஒருமணி இருபது நிமிடத்திலேயே போய்ச் சேர முடிந்தது...!
இடையில் ஓர் நல்ல காரியமும் செய்ய முடிந்தது.
ஆம் எனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த கார் என்னாச்சோ தெரியவில்லை திடீரென ஒருபக்கமாக இழுத்துப் போய் போவதற்கும் வருவதற்குமான சாலையைப் பிரித்துக் காட்ட நடுவில் போடப் பட்டிருந்த இரும்புத் தூண் ஒன்றில் காண்மூடி விழிப்பதற்குள் அடிபட்டு நின்றது. கார் முன்பக்கம் சேதமானது கண்முன்னே தெரிந்தது.... !
ஆனாலும் எனதுகார் ஓடியபடியும் பின்னால் வேறு வாகனம் வருவதாலும் என்னால் நிற்பாட்ட முடியவில்லை. நிறுத்தியும் நான் செய்யப் போவதும் ஒன்றும் இல்லை.
உடனும் அவசர உதவிச் சேவைக்கு(999) எனது அலைபேசியில் இருந்து போன்செய்து நடந்த விபரத்தை சொன்னேன்.
இதை உங்களிடம் சொல்லும் போதே மனக்கதவு டொக் ... டொக் ... என்று தட்டப் பட்டு உள்ளே இருந்து ஒரு குரல் மெதுவாக... “ நீ சொல்லா விட்டாலும் உனது பின்னால் வந்த யாராச்சும் சொல்லி இருப்பார்கள் ரொம்பத்தான் பீத்திக்காதைங்கோ....” என்று சொன்னது (மனச்சாட்சி) :)
பின்னர் வீடு வந்து படுக்கைக்குப் போகும் போது மணி ஒன்றைக்காட்டியது.
காலை கண் விழித்தபோது ஏழு மணி. எப்போதும் ஆறு மணிக்கு முன்னர் எழுப்பிவிடும் மனைவி இன்று எழுப்பவில்லையே... என அவள்மீது குறைப்பட்டேன்... “இல்லை நீங்கள் அசதியாக தூங்கினீர்கள் நேற்றும் வர லேற் தானே அதனால்தான் ஆறுதலாகவே போகட்டும் என்று எழுப்பவில்லை” என்றாள்.
எனக்கோ எட்டு மணிக்கு வேலையில் நிற்கவேண்டும் அனேகமாக ஆறரை மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி ஏழரைக்கு நிற்கும் நான் இப்போது ஏழு மணிக்கு வீட்டில் நிற்கின்றேன்... கதைத்துக் கொண்டிருக்க நேரமில்லை.
அவசர...அவசரமக காலைக்கடன் எல்லாம் முடித்து உடுப்பை மாற்றி வெளிக்கிடும் போது அப்போது தான் சுடச் சுட தேனீரைப் போட்டுவந்து தந்தாள் ..... “எனக்கு நேரம் போய் விட்டது என்னை எழுப்பவும் இல்லை ... இப்படி சுடச் சுட தந்தால் எப்படிக் குடிப்பது...?” என்று கொஞ்சம் எரிந்து விழுந்தேன்.
“சுடச் சுடத் தந்தாலும் பேசுவீங்க.... ஆறிப்போனாலும் பேசுவீங்க..”
மெதுவாக கண்ணை கசக்க வெளிக்கிட ‘’சரி... சரி ... எனக்கு நேரம் ஆச்சு வருகின்றேன்” என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு வேலை செய்யும் இடத்தை நோக்கி காரை செலுத்தினேன்.....
நிறையவே நேரம் இருக்கும்போது எல்லா சிக்னல் லைற்ரும் பச்சையில் இருக்கும். இன்றைக்கென்று அவசர அவசரமாக எனக்காகவே சிகப்புக்கு மாறுவது போல் மாறிக் கொண்டிருந்தது.
விரைவாகப் போய் சேர்ந்து விடவேண்டும் எனும் நோக்கில் எனது கார் சாலை வேக விதிகளையும் மீறி விரைந்து கொண்டிருந்தது.
அப்போதுதான் இது நடந்தது... எனக்கு முன்னதாகவே அதிகாலையிலேயே எழுந்து கமராவையும் தூக்கிக்கொண்டு காவல்துறையினர் எனக்காகவே காவல் இருப்பதுபோல் இருந்து. எனது வாகன வேகத்தை படம் பிடித்து என்னை ஓரங்கட்டினார்கள்.
உடனேயே நான் அப்பாவி அப்புசாமியாகிவிட்டேன். “ வேலைக்கு நேரமச்சு அதனால் வேகத்தை கவனிக்கவில்லை. இனிமேல் கவனித்து ஓட்டுகின்றேன் மன்னித்துக் கொள்ளுங்கள்...” என்றேன்... இருந்தாலும் எனது சொந்த விபரங்களை குறித்துக் கொண்டு போக விட்டார்கள்.
இனி எனது லைசென்சில் எத்தனை புள்ளிகள் போகின்றதோ...? எவளவு அபராதம் கட்டச் சொல்கின்றார்களோ...? வீட்டுக்கு கடிதம் வரும்போதுதான் தெரியும்!
ஒன்பது மணியின் பின்னர்தான் அலுவலகம் வந்து. அவசரமாக காலையில் முடித்துவிட வேண்டிய வேலைகளில் முனைப்பாக இருந்தேன்.
சிறிது நேரத்தின் பின்னர் தொலைபேசி ஒலித்தது.
ஆம் மனைவிதான் மறுமுனையில்.. “வந்திட்டீங்களா...? வந்ததும் உடனும் போன் செய்வீர்கள் இன்று உங்கள் போனைக் காணவில்லை அதனால்தான் எடுத்தேன்..”
“இல்லை... வந்ததும் கொஞ்ச வேலை இருந்தது முடிந்ததும் போன் பண்ணலாம் என்றுதான்.... ” என இழுக்க..... “ கோபம் இல்லையே...? எழுப்பி விடவில்லை என்று...? ”
“இல்லை.. ” மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். நீ சொன்னது போல் ஆறுதலாகவே எழுந்து வேலைக்கு வந்திருக்கலாம் என்று..!
ஆனால் அதை அவளிடம் சொல்லவில்லை... (அதற்காக எனக்கு ஈகோ என்று நீங்கள் நினைக்கக் கூடாது) “சரி காலையிலும் ரீ குடிக்கலை குடிச்சிட்டு வேலையைப் பாருங்கள் ..” என்று சொல்லிவிட்டு விடை பெற்றாள்.
மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் வேலை முடிந்து வீடு போகும்போது மறக்காமல் அவளிற்கு ஒரு மலர்ச் செண்டு வாங்கிப் போகவேண்டும் என்று....! நீங்களும் மறக்காமல் எனக்கு ஞாபகப் படுத்திவிடுங்கள். :)
சம்பவம் 2
எல்லோரும் பைத்தியமா...?
ஒருவர் செய்யும் செயலைப் பார்க்கும்போது சில நேரங்களில் எமக்கு அது பைத்தியக் காரத் தனமாக இருக்கும். ஆனால் அவரைப் பொறுத்தவரையில் அது அவரிற்கு ஏற்புடைய செயலாகவே இருக்கும்.
அது போலவே எமது செயல்களைப் பார்த்தும் பலர் எம்மை பைத்தியக்காரன் என நினைத்திருப்பார்கள்.
ஏன் சில சந்தர்ப்பங்களில் "அட இப்படி பைத்தியக் காரத்தனமாக நடந்துவிட்டோமே..?'' என எங்களை நாங்களே சொல்லிக் கொண்டதில்லையா....?
பார்க்கப் போனால் உலகத்தில் இருக்கின்ற எல்லோரிடத்திலும் பைத்தியக் காரத்தனம் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற பைத்தியக்காரத்தனத்தின் வீதங்கள் தான் வித்தியாசப் படுகின்றது.!
இங்கு பலர் இதனை வெளியில் ஒத்துக் கொள்ளமாட்டார்கள் என்பது தெரியும். இருந்தாலும் எப்போதாவது நீங்கள் செய்த செயல்களை உள்மனதில் நினைத்துப் பாருங்கள் அப்போது உங்கள் மனம் அதை ஒப்புக்கொள்ளும்.
சரி அன்று நடந்தது என்ன...?
நகரினுள் சில வேலைகள் இருந்ததால் அவசரமாகப் போய்க்கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்தக் குரல்கேட்டது. மிகவும் பரீட்சயமான குரல் போல் இருந்தது.
குரல் வந்த திசையை நோக்கினேன்.ஒருவன் கோமாளி வேடமிட்டு பகிடி கதைகள் சொல்லி மக்களிற்கு சிரிப்பூட்டிக் கொண்டு நின்றான். அவனைச் சுற்றி சிறிய கூட்டம் நின்று வேடிக்கை பார்த்தது.
அருகில் சென்றபோது அடையாளம் கண்டு கொண்டேன். ஆம் "போல்" தான் அவன் எனது வீட்டிற்கு அண்மையில் வசிப்பவன். காணும் இடங்களில் எல்லாம் நலன் விசாரித்து ஏதாவது கதைப்பான். ஆனால் அவனை இந்தக் கோலத்தில் ஒரு நாளும் கண்டதில்லை. எதற்காக இந்தக் கோலம்...? பைத்தியக் காரன் என மனதிற்குள் நினைத்தபடி மெதுவாக அங்கிருந்து விலகினேன்...!
சில நாட்களின் பின்னர் அவனை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவனிடன் வினவினேன் அன்று ஏன் அப்படி இருந்தாய் என.?
அவன் சொன்னான் "பல நாட்களாக நகரிற்குள் போய் வருகின்றேன் யாருடைய முகத்திலும் சந்தோஷத்தினை காணவில்லை. யாரிடமும் வணக்கம் கூட சொல்ல நேரமில்லாது இயந்திரம்போல் திரிகின்றார்கள். அவர்களை சிரிக்க வைத்து அவர்கள் தம் பிரச்சனைகளை ஒரு நிமிடமாவது மறக்க வைக்க வேண்டும் என முயற்சி செய்தேன். " என சாதாரணமாக சொல்லி விட்டு விடை பெற்றான்... !
அவன் போன பாதையை கொஞ்ச நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றேன்.
சம்பவம் 3
(நான் சொல்ல வருவது இங்கிலாந்தில் உள்ள நிலமை பற்றி மற்றைய நாட்டில் எப்படி எனத்தெரியவில்லை )
இன்று சில பெற்றோரை பார்க்கும் போது மன வேதனையாக இருக்கின்றது. சிலர் தமது பிள்ளைக்கு தமிழ் தெரியாது எனச் சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகின்றார்கள். பல தமிழர்கள் கூடியிருக்கும் நிகழ்வுகளில் கூட ஆங்கிலத்தில் பேசிக் கொள்வதில் ஏதோ திருப்தி காண்கின்றார்கள்.
எதற்காக இப்படி என்று நினைத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இங்கு பிறக்கும் பிள்ளை பாடசாலை போகும்போது ஆங்கிலத்திலேயே கல்வி கற்கின்றது. ஏனைய ஆங்கிலேயப் பிள்ளைகளுடன் ஆங்கிலத்திலேயே தொடர் பாடுகின்றது. வீட்டில் இருக்கும் நேரத்திலாவது அவர்களுடன் தமிழில் பேசாதுவிட்டால் அந்தப் பிள்ளைகள் எப்படி தமிழ் பேசும்...?
பார்க்கப் போனால் சிங்களவனோ வேறு இனத்தவனோ எம்மை அழிக்க வேண்டியதில்லை எம்மை எமது அடையாளத்தை, எமது பண்பாட்டு நாகரீகத்தை நாமே அழித்து வருகின்றோம்.
சரி அன்றொரு நாள் நடந்த சம்பவத்தினை பற்றி உங்களிற்குச் சொல்லுகின்றேன்.
நண்பனின் மகனின் பிறந்தநாளிற்கு குடும்பத் தோடு போயிருந்தேன். எம்முடன் சேர்த்து பத்துக் குடும்பத்தினர் மட்டில் இருந்தனர். நண்பன் எம்மை எல்லோரிடத்திலும் அறிமுகம் செய்துவிட்டு. படம் எடுப்பதில் மும்முரமாக நின்றான்.
எல்லோரையும் தெரிந்திருக்கவில்லை தெரியாதவரிடத்திலும் தெரிந்தவர் போல் பேசுவது என் இயல்பு. பலர் என்னிடம் பேசினார்கள் ஆனால் அதிகமானோர் ஆங்கிலத்திலேயே உரையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அங்குள்ள அத்தனை பேரும் தாமிழர்கள். அடித்தால் "ஐயோ.... அம்மா" என்றுதான் கத்துவார்கள். :)
இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால் சிலர் பேசிக்கொண்டிருந்தார்கள் ஈழத்தில் நடைபெறும் பிரச்சனைகளால் தமிழ் மக்கள் எவ்வளவுக்கு கஸ்ரப் படுகின்றார்கள் என்று. அவர்களது தமிழ்ப் பற்றும் தமிழர்களில் உள்ள கரிசனையும் ஆங்கில வார்த்தைகளில் தெறித்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தின் பின்னர் ஒரு பெரியவர் என்னிடம் உரையாடினார். "நாட்டில் எந்த இடம்....? அப்பா பெயர்..? என்ன வேலை செய்கின்றாய்..? " எல்லாம் விசாரித்துவிட்டு "லண்டனுக்கு எப்போது வந்தாய்...?" என வினவினார். "ஒரு பத்து வருடம் இருக்கும்" என்றேன்.
"ஓ... நான் லண்டனுக்கும் இலங்கைக்கும் விமானம் ஓடாத காலத்தில் கப்பலில் வந்தேன்" என்றார்..! பின்னர் கேட்டார் ''நீங்கள் அகதியாகவா வந்தீர்கள்...?" எனக்கு கடுப்பாகிப் போய்விட்டது இருந்தாலும் அது உண்மைதானே....? ''ஓம்" என்பது போல் தலையை ஆட்டினேன்.
எனது முகமாற்றத்தைக் கண்ட மனைவி என்னை ஒன்றும் பேசவேண்டாம் என்பதுபோல் பார்த்தாள். அவள் பேசுவதை விட பார்வைகளின் அர்த்தம் எனக்கு நன்றாகவே புரியும். இருந்தாலும் அந்தப் பெரியவரிடம் ஏதாவது சொல்லாதுவிடில் இன்று எனக்கு உறக்கமே வராதே..?
" சொந்த நாட்டை விட்டு அன்னிய நாடு வந்தவர்கள் எல்லோருமே அகதிகள்தான்.... அரசியல் நிலை காரணாமாக நான் இங்கு அரசியல் தஞ்சம் புகுந்தேன்... அப்போது பிரச்சனை இல்லாத போதும் லண்டனில் படித்து கைநிறைய பணம் சேர்க்க வேண்டும் எனும் நோக்கோடு நீங்கள் இங்கு பொருளாதார தஞ்சம் புகுந்தீர்கள்.........! பார்க்கப் போனால் இருவருமே அகதிகள்தான் இதில் நான் அரசியல் அகதி நீங்கள் பொருளாதார அகதி" என்றேன் மெதுவான சிரிப்புடன் நகைச் சுவைப் பாங்காக. பெரியவருக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை. இருந்தாலும் எனக்கு மனதுக்குள் இப்படிக் கதைக்க வேண்டி வந்து விட்டதே எனும் வருத்தம் இருந்தது .... நீங்களே சொல்லுங்கள் நான் கதைத்ததில் தவறு ஏதும் உண்டா....?
பின்னர் பெரியவரை சமாளிக்கும் விதமாக நண்பன் எனக்காக வைத்திருந்த பலகாரத்தை பெரியவரிடம் நீட்டினேன். நன்றி சொல்லி அதில் இருந்த வடையை மட்டும் எடுத்துக் கொண்டார். பூந்தி லட்டை எனது வாயினுள் அமுக்கினேன்...... " கடவுளே வாயை உண்பதாற்கு மட்டும் பாவிப்பதாக நீ படைத்திருந்தால் ஒரு பிரச்சனையும் இருக்காதே...!" என நினைத்துக் கொண்டேன்.
அப்போதுதான் மற்றைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த மகள் "அப்பா...." என அழைத்தபடி எனது காலைக் கட்டிப் பிடித்தாள்.... "அப்பா" என்றால் அர்த்தம் தெரியாத தமிழ் சிறுவர்கள் பலர் அங்கே விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
மகளை வாரி அணைத்தேன் இருந்தாலும் மனைவியின் பார்வை மனதில் பயத்தை ஊட்டியது..!
2 comments:
திரு.பாலன். மூன்றுமே சரியான சம்பவங்கள்தான்!
2-வது சம்பவம் என்னைத் திகைக்க வைத்தது..
அவர் உண்மையிலேயே வித்தியாசமானவர்தான்..!
சம்பவம் 1 பலமுறை பலவிதங்களில்
நாம் வாழ்க்கையில் அனுபவப்பட்டதே தான்..!
இப்போதெல்லாம் எல்லாம் நன்மைக்கே
என்று நினைத்துக் கொள்வதால் இது பெரிதாக
பாதிப்பதில்லை...
அன்று ஒருவேளை காவல்துறையினர் உங்கள் வண்டியை நிறுத்தாவிட்டால் , நீங்கள் வேகமாய்ப் போனதற்கு
வேறு ஏதாவது அசம்பாவிதமாகியிருந்தால்..!!!!??
நினைக்கவே பயம்.. எல்லாம் நன்மைக்கே!!!
3-வது சம்பவம்
அந்தப் பெரியவரைக் கேள்வி கேட்டதை விடவும்
"அப்பா" என்றால் அர்த்தம் தெரியாத தமிழ் சிறுவர்கள் பலர் அங்கே விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
இதுதான் கவலை கொள்ள வைக்கிறது!
"
3 சம்பவங்களையும் தனித்தனிப் பதிவுகளாக வெளியிட்டிருந்தால்
கட்டுரை இன்னும் கவனம் பெறும் என்பது
என் தாழ்மையான கருத்து!
"
மிக்க நன்றி நண்பரே உங்கள் ஊக்கம் என்னை மேலும் எழுதத் தூண்டுகின்றது
Post a Comment