சில மனிதர்கள்

டான்....டான்...டான்... பாடசாலை முடிந்து விட்டதற்கான அறிவிப்பு இறுதி மணி அடித்தது. ரியூசன் (Tuition) தொடங்க இன்னமும் அரை மணிநேரம் இருக்கின்றது. நேற்று கணக்கு ஆசிரியர் தந்த வீட்டு வேலை முடிக்கவில்லை ”நீ முடித்துவிட்டாயாடா..?” மாறனை வினவினேன் ” ஓ.. நான் நேற்றே செய்து முடித்துவிட்டேன்” என்றான் அவன் “சரி நான் முதலில் ரியூசனுக்கு போய் கணக்கை செய்கின்றேன் நீ ஆறுதலாகவே வா..” என்று சொல்லிவிட்டு ரியூசனை நோக்கி விரைகின்றேன்..

ரியூசன் பாடசாலையில் இருந்து ஐந்து நிமிட சைக்கில் ஓட்டத்தில் அடைந்து விடலாம்... நகரச்சந்தையினை அண்மித்து இருந்தது. அதன் எதிரே ஒரு மரக்காலையும் அதனுடன் சேர்ந்து நிரையாக பல கடைகளும் இருந்தன. அரச மருத்துவ மனையும் பிரதான வீதிக்கு மறு பக்கத்திலேயே இருந்தது.

ஐந்து நிமிடத்தில் ரியூசனை அடைந்துவிட்டேன். அங்கு சென்றதும்தான் தெரிந்தது அன்று கணக்கு ஆசிரியர் வரமாட்டார் என்பது. சரி என்ன செய்யலாம் எனயோசித்துவிட்டு சைக்கிலை அதற்கென ஒதுக்கப் பட்ட இடத்தில் நிறுத்திவிட்டு மற்றைய மாணவ(வி)கள் வரவிற்காக காத்திருந்தேன்.

சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள். மாறனும் வந்தான். “கணக்கு வாத்தியார் வரமாட்டாராம் அடுத்தபாடம் தொடங்க இன்னும் ஒருமணித்தியாலம் இருக்கே..... இப்போ என்ன செய்யலாம் ..? ” எனக் கேட்டேன் “நீ ஹோம் வேர்க் செய்திட்டியா..? ” என்றான் “இல்லை வாத்தியார் வரவில்லைத்தானே இரவு வீட்டுக்கு கொண்டு போய் செய்வோம்” என்றேன்.
”சரி வா மணி அண்ணாவின் கடைக்குப் போய் வருவோம்” என்றான்.

மணி அண்ணா ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க சாதாரணமான மனிதர். எமது கல்வி நிலையத்துக்கு எதிரில் இருக்கும் மரக்காலைக்குச் சொந்தக் காரர் அதனுடன் சேர்ந்து அவருக்குச் சொந்தமாக மரத் தளபாடங்கள் மரணச் சடங்குகளிற்குத் தேவையான பொருட்கள் (பெட்டி) விற்கும் கடையும் இருந்தது..

எமக்கு பாட ஆசிரியர் வராத போது மணி அண்ணாவின் கடைக்குச் சென்று அவருடன் பேசிக் கொண்டிருப்பது மாறனுக்கும் எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். அவருக்கும் எங்கள் இருவரில் மிகுந்த நேசம். மிகுந்த அக்கறையுடன் நலன் விசாரித்துக் கொள்வார். நாட்டுப் பிரச்சனைகளால் எமது படிப்பை கைவிட வேண்டாம் என புத்திமதி கூறுவார். சினிமா அரசியல் நாட்டு நடப்புக்கள் என இன்னோரன்ன கதைகள் பேசுவோம்...

அன்றும் நானும் மாறனும் மணி அண்ணாவின் கடைக்குப் போய் ஒரு பதினைந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்திருப்போம் திடீரென ஆகாயத்தில் பேரிரைச்சலுடன் விமானம் ஒன்று வட்டமிட்டது. வானத்தில் பருந்தைப் பார்த்த கோழிக் குஞ்சுகள் தாயின் இறகிற்குள் ஓடி ஒளிந்து கொள்வது போல் நாமும் பூமித்தாயின் மடியினுள்(பதுங்கு குழி) ஒளிந்து கொண்டோம்.

பக்கத்து கடைகளில் இருந்த சிலரும் எம்முடன் இணைந்து கொண்டனர் மணியண்ணா கடைசியாக வந்து பதுங்கு குழியினுள் இறங்கி வாசலிலேயே நின்றபடி என்ன நடக்கின்றது என்பதனை விவர்ணம் செய்தார். “அண்ணா உள்ளே வாங்கோ..” எனக்கூப்பிட்டும் கேக்காதவராய் “டே....டேய் பதிக்கிறாண்டா.. போடப் போறான்..” என்று சொல்லவும் பெரும் ஓசையுடன் குண்டு வெடிக்கவும் சரியாக இருந்தது..

விமானத்தின் ஒலி மறைந்ததும் சிறிது நேர நிசப்தம் பின்னர் ஒவ்வொருவராக வெளியே வந்தோம். சிலநேரம் திரும்பவும் வரலாம் எனும் எண்ணத்தில் பதுங்கு குழியின் அருகிலேயே இருந்து தாக்குதலால் ஏதாவது சேதம் ஏற்பட்டிருக்குமா...? யாருக்கேனும் காயங்கள் ஏற்பட்டிருக்குமா..? யாராச்சும் இறந்திருப்பார்களா..? என்பது பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது
மணி அண்ணா இருங்கள் வருகின்றேன் என்று சொல்லிவிட்டு மருத்துவ மனையை நோக்கிப் போனார்.

அனேகமாக இப்படியான அசம்பாவிதங்கள் நடக்கும் போது இறந்தவர்களின் உடலங்களும், காயப் பட்டவர்களையும் முதலில் மருத்துவ மனைக்குத்தான் கொண்டு வருவார்கள். அதனால்தான் சேத விபரம் பற்றி அறிய மணி அண்ணா மருத்துவ மனைக்குப் போயிருக்கின்றார்.

கால் மணி நேரத்தில் மணிஅண்ணா திரும்ப வந்தார். அவரது முகத்தில் கவலை படர்ந்திருந்தது ” என்னண்ணா நடந்தது...?” என வினவினேன்...
“ஒன்றும் இல்லை. அடி வாய்க்கேல்லையடா தம்பி.... குண்டு இலக்குத்தவறி வெறும் காணீக்கை விழுந்து வெடித்திருக்கு...” என்றார் கவலையாக.
“நல்லது தானே அண்ணா அதுக்கேன் கவலைப் படுறீங்க...?” எனக்கேட்க மணியண்ணா ஏதும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டார். மாறன் எனது முதுகில் மெதுவாக கிள்ளினான்.....

“சரி அண்ணா குண்டுச்சத்தம் கேட்டதால் வீட்டில் எம்மை தேடி வெளிக்கிட்டிருப்பார்கள் நாங்கள் போய் வருகின்றோம்” என்று சொல்லிவிட்டு சைக்கிள் நிறுத்தியிருந்த இடத்தை நோக்கி நானும் மாறனும் போனோம்...!

இன்றைய பாடங்கள் ஏதும் நடைபெறாது என்பதனால் சக மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். நானும் விடை பெற்றுக் கொண்டு சைக்கிலை வீடு நோக்கி மிதித்தேன்... சைக்கில்தான் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருந்தது மனம் மணியண்ணா சொன்ன வார்த்தைகளால் எதிரொலித்துக் கொண்டிருந்தது...
“ஒன்றும் இல்லை. அடி வாய்க்கேல்லையடா தம்பி.... குண்டு இலக்குத்தவறி வெறும் காணீக்கை விழுந்து வெடித்திருக்கு...” ..............“ஒன்றும் இல்லை. அடி வாய்க்கேல்லையடா தம்பி.... குண்டு இலக்குத்தவறி வெறும் காணீக்கை விழுந்து வெடித்திருக்கு...” .... .....

சீ... என்ன மனிதர் இவர் தனக்கு வியாபாரம் ஆகவேண்டும் என்பதற்காக மற்றையவன் சாகவேண்டும் என்று ஆசைப் படுகின்றாரே... சுயநலவாதி....இதுபோன்ற மனிதர்களிற்காகவா அண்ணா மாரெல்லாம் தமது உயிரையும் கொடுத்து இவர்களிற்கெல்லாம் விடுதலை வாங்கிக் கொடுக்க போராடுகின்றார்கள்..... நினைக்கும் போது கண்களில் நீர்முட்டி பார்வையை மறைத்தது... துடைத்துக்கொண்டே வீட்டுக்குப் போய்விட்டேன்...

சிறிது காலத்தின்பின்னர் மாறனும் நானும் புலம்பெயர்ந்து இங்கிலாந்துக்கு வந்துவிட்டோம்.
ஓர் நாள் எனதுவீட்டு தொலைபேசி அடித்துக்கொண்டிருந்தது “யாராக இருக்கும்..?” எனும் நினைப்புடன் தொலைபேசியை எடுத்தேன் மறு முனையில் மாறன் எப்போதும் போல் நலன் விசாரித்துவிட்டு நாட்டுப் புதினங்களை கதைத்தான் ... “டேய் உனக்கு மணியண்ணையை ஞாபகம் இருக்கோ...?” என மாறன் கேட்டான். “ஓம் எங்கட ரியூட்டரிக்கு முன்னால மரக்காலை எல்லாம் வைத்திருந்தார் அவரைத்தானே கேக்கிறாய்...?”
“ஓமடா..
அவரெல்லே மண்டையை போட்டுட்டார் ...”

“ஏன் என்ன நடந்தது...?”

“ யாழ் மாவட்டத்தை ஆமி பிடிப்பதற்காக நடந்த சண்டையில் அவரது வீட்டிலையும் குண்டு விழுந்து மனிசன் அந்த இடத்திலேயே சரியாம்...”

மாறனுடன் கதைத்து முடித்துவிட்டு தொலைபேசியை வைக்கும்போது என்னையும் அறியாமல் ஒரு சொட்டுக் கண்ணீர் மணி அண்ணாவிற்காக கன்னத்தில் வழிந்துகொண்டிருந்தது.

No comments: